"திமுக '5ஜி' குடும்ப ஆட்சி": பிரதமர் மோடி பிரச்சார உரை
செய்தி முன்னோட்டம்
"திமுகவும் காங்கிரஸும் ஒரே போலத்தான். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. இவர்கள் இருவருமே ஊழலையும், குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து நடத்துபவர்கள். அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு 5ஜி தொழில்நுட்பமே வளர்கிறது".
"தமிழகத்தில் திமுக ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். தனியாக அவர்கள் ஒரு 5ஜி-யை நடத்தி வருகின்றனர்" என்று பிரதமர் மோடி, சேலத்தில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்திய மோடி, இன்று சேலத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசினார்.
அப்போது அவரோடு, பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி
மாரியம்மனை வணங்கி பிரச்சாரத்தை துவங்கிய மோடி
பிரச்சாரத்தை துவங்கும் முன்னர், சேலத்தின் பிரபலமான கோட்டை மாரியம்மனை வணங்கி தொடங்கினார்.
"கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்பாக நான் பலமுறை தமிழகம் வந்திருக்கிறேன். சேலம் வருவதன் மூலம் மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது".
"கோயம்புத்தூரில் நேற்று மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டே பயணித்தேன். தமிழகத்தில் மோடி ஆகிய எனக்கும், பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து, திமுகவின் தூக்கமே தொலைந்துப் போய்விட்டது".
"தமிழக மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டனர். இம்முறை ஏப்ரல் 19-ம் தேதியன்று விழுகிற ஒவ்வொரு வாக்கும், பாஜகவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் என்று மக்கள் உறுதியாக முடிவு செய்துவிட்டார்கள்" என உரையாற்றினார்.
சேலம்
சேலம் மாவட்டத்துடன் தனக்கிருக்கும் தொடர்பு பற்றி பிரதமர்
"நான் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்றபோது, என்னுடன் ஒரு பெரிய குழு வந்திருந்த ஓர் இளைஞர் இந்த ஊரைச்சேர்ந்த ரத்னவேல். அவர், சேலத்தின் பெருமைகள் மற்றும் சிறப்புகளை என்னிடம் கூறிக்கொண்டே வந்தார். அதைக்கேட்ட பின்னர், சேலத்தின் மீது எனக்கு ஒரு மிகப் பெரிய ஈர்ப்பு உருவானது"
"துரதிர்ஷ்டவசமாக அவர் தற்போது நம்முடன் இல்லை. சேலம் மண்ணில் கால் வைத்தவுடன் எனக்கு அவருடைய நினைவு வந்துகொண்டே இருக்கிறது"எனக்கூறினார்.
"இந்த நேரத்தில் நான் கே.என்.லட்சுமணனை நினைவுகூர்கிறேன். தமிழகத்தில் பாஜக காலூன்ற தொடக்கக் காலத்தில் பாடுபட்ட மிக முக்கியமான மனிதர்"
"இதேபோல், சேலம் ஆடிட்டர் ரமேஷின் நினைவுகள் வருகின்றன. கட்சிக்காக தனது உயிரையே தியாகம் செய்து உழைத்த அந்த மாபெரும் மனிதரை நினைவுகூர்கிறேன்"என தழுதழுதார் பிரதமர்.