LOADING...
பரிக்ஷா பே சர்ச்சா 2026: குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்; பெற்றோர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்
பெற்றோர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்

பரிக்ஷா பே சர்ச்சா 2026: குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்; பெற்றோர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 09, 2026
12:55 pm

செய்தி முன்னோட்டம்

அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற பரிக்ஷா பே சர்ச்சா 2026 நிகழ்வில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது ஒரு மாணவர், "பெற்றோர்கள் எங்களை நண்பர்கள் அல்லது உடன்பிறந்தவர்களுடன் ஒப்பிடும்போது ஏற்படும் அழுத்தத்தை எப்படி கையாள்வது?" என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த பிரதமர், "பெற்றோர்கள் உங்கள் சகோதரியின் கையெழுத்து நன்றாக இருப்பதாகக் கூறினால், அதை ஒரு அழுத்தமாகப் பார்க்காமல், உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகக் கருதுங்கள்," என்றார். "சுட்டிக்காட்டியதற்கு நன்றி, நான் இன்னும் சிறப்பாகச் செய்ய முயற்சிப்பேன்" என்று நேர்மறையாகப் பதிலளிப்பது மன அழுத்தத்தைத் தணிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அறிவுரை

பெற்றோர்களுக்கான அறிவுரை

அதே நேரத்தில், வீட்டில் அதிகப்படியான போட்டிச் சூழலை உருவாக்க வேண்டாம் என்று பெற்றோர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். ஒரு குழந்தையை மற்றவர்கள் முன்னிலையில் அளவுக்கு அதிகமாகப் பாராட்டுவது மற்றொரு குழந்தைக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மற்றவர்களின் திறமைகளைக் கண்டு பயப்படாமல், அவர்களிடமிருந்து எப்படிக் கற்றுக்கொள்வது என்பதை குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் பயிற்றுவிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமையையும் அங்கீகரிப்பதே ஆரோக்கியமான வளர்ப்பு முறை என்று அவர் வலியுறுத்தினார்.

உணவு முறை

ஆரோக்கியமான உணவு முறை

சிறப்பாகச் செயல்பட என்ன மாதிரியான டயட்டைப் பின்பற்ற வேண்டும் என்ற கேள்விக்கு, தனக்கென்று தனிப்பட்ட 'டயட் பிளான்' எதுவும் இல்லை என்று பிரதமர் ஆச்சரியமான பதிலளித்தார். வீட்டில் என்ன கிடைக்கிறதோ அதையே தான் உண்பதாகவும், எப்போதெல்லாம் தேவையோ அப்போது தனக்காக 'கிச்சடி' தயாரித்துக் கொள்வதாகவும் கூறினார். "உணவு என்பது கசப்பான மருந்து போல இருக்கக் கூடாது. அது மனதுக்கும் வயிற்றுக்கும் திருப்தி அளிப்பதாக இருக்க வேண்டும்." என்றார். எதையும் கட்டாயப்படுத்தி உண்ணாமல், ரசித்து உண்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது அவரது கருத்தாகும்.

Advertisement

உடல் நலம்

உடல் நலமும் சூரிய உதயமும்

மாணவர்கள் தங்கள் உடல் நலனைப் புறக்கணிக்கக் கூடாது என்று வலியுறுத்திய பிரதமர், சில முக்கிய வாழ்க்கை முறை மாற்றங்களைப் பரிந்துரைத்தார்: சூரிய உதயம்: இயற்கையான ஆற்றலைப் பெற தினமும் சூரிய உதயத்தைப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மூச்சுப் பயிற்சி: மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், கவனம் சிதறாமல் இருக்கவும் தினமும் ஒரு முறையாவது ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியமே மற்ற அனைத்திற்கும் அடிப்படை என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement