குவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 21) அதிகாலை அமெரிக்கா கிளம்பினார். அங்கு அவர் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடக்கும் நான்காவது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். குவாட் உச்சி மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அவரது சொந்த ஊரான வில்மிங்டனில் நடத்துகிறார். குவாட் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கியது. குவாட் உச்சி மாநாடு உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள், கடல்சார் பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஒரு லட்சிய புற்றுநோயை எதிர்த்துப் போராடும் முன்முயற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த குவாட் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது குறிப்பிடத்தக்கது.
ஐநா சபையில் பிரதமர் மோடி உரை
உச்சிமாநாட்டின் போது பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தும் பிரதமர் மோடி, பரஸ்பர நலன்கள் குறித்து விவாதிப்பார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 23 ஆம் தேதி, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், பல உலகத் தலைவர்கள் பங்கேற்கும் எதிர்காலத்திற்கான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் ஆகிய அதிநவீன பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே அதிக ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக, அவர் செப்டம்பர் 22 அன்று நியூயார்க்கில் இருக்கும்போது இந்திய சமூகத்துடனும், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடனும் உரையாட உள்ளார் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.