 
                                                                                அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொள்ள இன்று(ஜூன் 20) அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு அரசு விருந்து அளிக்க உள்ளனர். இதுதான் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் மிக உயர்ந்த வரவேற்பாகும். இந்த பயணத்தின் போது, ஜெட் என்ஜின் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 நாள் பயணத்தின் போது, பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார். மேலும், வணிகத் தலைவர்களையும் இந்திய வெளிநாட்டவர்களையும் அவர் சந்தித்து பேசுவார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறையாகும்.
கிண்ட்ஜ்
ஐநா சபையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்
"எந்த இந்தியப் பிரதமரும் இரண்டு முறை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியதில்லை. உலகம் முழுவதும், மிகக் குறைவானவர்களே இதைச் செய்திருக்கிறார்கள்... வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா... அதனால்தான் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது," என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். பிரான்சின் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் தென் கொரியாவின் யூன் சுக் யோல் ஆகியோருக்குப் பிறகு அதிபர் ஜோ பைடனால் அரசு முறை பயணம் மற்றும் இரவு விருந்துக்காக அழைக்கப்பட்ட மூன்றாவது உலகத் தலைவர் பிரதமர் மோடி ஆவார். உலக யோகா தினமான நாளை(ஜூன்-21), ஐநா சபையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். மேலும், பிரதமர் மோடியை வரவேற்க நூற்றுக்கணக்கான இந்திய-அமெரிக்கர்கள் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் கூட உள்ளனர்.