இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தொழிற்சாலை; ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து கூட்டாக தொடங்கி வைத்தார் மோடி
திங்களன்று (அக்டோபர் 28) டாடா-ஏர்பஸ் விமான ஆலையை திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குஜராத் மாநிலம் வதோதரா சென்றடைந்தனர். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, பிரதமர்கள் மோடி மற்றும் சான்செஸ் ஆகியோர் வதோதராவில் மெகா ரோட் ஷோ நடத்தினர். அதன் பின்னர், பிரதமர் மோடி, ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து, டாடா மேம்பட்ட சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 விமானங்களைத் தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை கூட்டாகத் திறந்துவைத்தனர். ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ராணுவ போக்குவரத்துக்கு இந்திய விமானந்தப்படை 56 சி-295 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை கொடுத்திருந்தது. இதில் முதல் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் நிலையில், 40 விமானங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு நிறுவனம்
இந்த 40 விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் பொறுப்பேற்றுள்ளது. இதற்காக, குஜராத் மாநிலம் வதோதராவில் ராணுவ விமானங்களுக்கான தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது இந்தியாவில் ராணுவ விமானங்களுக்கான முதல் தனியார் துறை அலையாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் டாடாவைத் தவிர, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்ற முன்னணி பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களும், தனியார் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் பங்களிக்க உள்ளன. முன்னதாக அக்டோபர் 2022இல், பிரதமர் மோடி வதோதராவில் இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்
டாடா விமான தொழிற்சாலை திறப்புக்குப் பிறகு, அம்ரேலியில் உள்ள துதாலாவில் பாரத மாதா சரோவரை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பொது-தனியார் கூட்டாண்மை (பிபிபி) மாதிரியின் கீழ் குஜராத் அரசு மற்றும் தோலாக்கியா அறக்கட்டளையின் ஒத்துழைப்பு மூலம் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. தோலாக்கியா அறக்கட்டளை ஒரு தடுப்பணையை மேம்படுத்தியது. அதை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, பலப்படுத்திய பிறகு, கொள்ளளவு 24.5 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. இந்த முன்னேற்றம் அருகிலுள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைகளில் நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளது. இது சிறந்த நீர்ப்பாசனத்தை வழங்குவதன் மூலம் உள்ளூர் கிராமங்களுக்கும் விவசாயிகளுக்கும் உதவும். இந்த திட்டம் தவிர மேலும் சில திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.