காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு: துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை துபாயில் தரையிறங்கினார். அங்கு COP28 எனப்படும் காலநிலை குறித்த ஐக்கிய நாடுகளின் மாநாட்டுடன் நடைபெறும் உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் தரையிறங்கியதும், அவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்றார். மேலும், "COP28 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக துபாயில் தரையிறங்கினேன். சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்கி இருக்கிறோம்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் மோடியை வரவேற்ற துபாய் வாழ் இந்தியர்கள்
இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி உலகத் தலைவர்களை சந்திப்பார் என்றும், காலநிலை நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பார் என்றும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலில் வந்து இறங்கிய பிரதமர் மோடியை இந்திய சமூகத்தினரை வரவேற்றனர். 'மோடி, மோடி', 'அப் கி பார் மோடி சர்க்கார்' மற்றும் 'வந்தே மாதரம்' போன்ற முழக்கங்களை எழுப்பிய துபாய் வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். இதனையடுத்து, ட்வீட் செய்த பிரதமர் மோடி, துபாய் வாழ் இந்தியர்களின் வரவேற்பு தன் மனதை தொட்டதாக தெரிவித்துள்ளார்.