3 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தனது வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அடுத்ததாக செப்டம்பர் 3-4 தேதிகளில் புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். புருனேவுடன் தூதரக உறவுகளைத் தொடங்கி 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதற்கான விழாவில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடி, புருனேவுக்கு இருதரப்பு பயணமாக செல்லும் முதல் இந்திய தலைவர் என்ற பெருமையை பெறுவார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னர் மன்மோகன் சிங் சென்றிருந்தாலும், அவர் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மட்டுமே அங்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் பயணத்தின் முக்கிய தகவல்கள்
செப்டம்பர் 4-5 தேதிகளில் பிரதமர் சிங்கப்பூர் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட இரு நாட்டு மூத்த அமைச்சர்களின் உயர்மட்டக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணம் அமைய உள்ளது. முன்னதாக அமைச்சர்கள் கூட்டத்தில் இரு நாடுகளும் டிஜிட்டல், திறன் மேம்பாடு, நிலைத்தன்மை, சுகாதாரம், இணைப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை ஆராய்ந்தனர். மேம்பட்ட உற்பத்தி மற்றும் செமிகண்டக்டர், விமானம் மற்றும் கடல்வழி இணைப்பு ஆகியவை குறித்தும் இரு தரப்பும் விவாதத்தினர்.