ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - FIR வெளியானது
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு நேற்று(அக்.,25) பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இருசக்கர வாகனத்தில் வந்த நபரால் இந்த குண்டு வீசப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த நபரை விரட்டி பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் சென்னை தேனாம்பேட்டை பகுதியினை சேர்ந்த வினோத் என்று தகவல்கள் வெளியானது. தான் சிறையில் இருந்தப்பொழுது வெளியில் வர அனுமதியளிக்காத காரணத்தினால் இவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்திருந்தார். கைது செய்யப்பட்டவர் வைத்திருந்த 2 பெட்ரோல் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதான வாயிலை நோக்கி வீசப்பட்ட 2 பெட்ரோல் வெடிகுண்டுகள்
இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கையானது (FIR) பதியப்பட்டுள்ளது. அதன்படி இதுகுறித்து சென்னை கிண்டி காவல்நிலைய தலைமை காவலரான மோகன் அளித்த புகாரின் பேரில், 5 பிரிவுகளில், பிடிபட்ட வினோத் என்னும் நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அந்த புகாரில்,ஆளுநர் மாளிகை நோக்கி, பெட்ரோல் கொண்டு நிரப்பப்பட்ட பாட்டிலானது மாளிகையின் நுழைவு வாயிலான எண்.,1 முன்னர் பலத்த சத்தத்துடன் வெடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரதான வாயிலை நோக்கி, 2 பெட்ரோல் வெடிகுண்டுகள் நெருப்பு பற்றவைத்த நிலையில் எறியப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.