பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எனினும், கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா நினைவு சின்னம் ஒன்றினை ரூ.81 கோடி செலவில் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்தது. இந்த திட்டம் குறித்த அறிவிப்பு முதலில் வெளியான நிலையில் பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தது. இருப்பினும், தமிழக அரசு அதற்கான முயற்சிகள் அனைத்தையும் எடுத்து வந்தது. அதன்படி தேவையான அனைத்து அனுமதிகளும் இந்த நினைவு சின்னத்திற்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவும் அனுமதி வழங்கியது. அதனைத்தொடர்ந்து மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியும் கிடைத்தது.
கடல்வளத்தினை பாதுகாக்க வேண்டும் என்பதால் நினைவு சின்னத்திற்கு தடை விதிக்க கோரல்
இந்நிலையில், அடுத்த 3 மாதங்களில் இதன் கட்டுமான பணிகளை துவங்கி, ஒன்றரை ஆண்டுக்குள் முழுமையாக பேனா நினைவு சின்னத்தினை கட்டி முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இதனிடையே, இந்த நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டத்தினை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி, கடல்வளத்தினை பாதுகாக்க வேண்டும். அதனால் இந்த நினைவுச்சின்னத்தினை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று(ஜூலை.,10)உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது, "பொது நலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை" என்று கூறிய நீதிபதி அமர்வு இந்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.