'சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்' - ஆய்வுக்கு பின் மத்தியக்குழு தகவல்
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பினை ஆய்வுச்செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றினை மத்திய உள்துறை அமைத்துள்ளது. அதன்படி இந்த குழு நேற்று(டிச.,11)இரவு 11.40 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்து கிண்டியிலுள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று(டிச.,12)காலை இவர்களுடன் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் இதர அதிகாரிகள் இந்த குழுவை சந்தித்து வெள்ளப்பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின், இந்த மத்திய ஆய்வு குழு மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்த மத்திய ஆய்வுக்குழு தலைவர்
அதனையடுத்து வடசென்னை உள்ளிட்ட வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட அனைத்து பகுதிகளையும் மத்திய ஆய்வுக்குழு 2 குழுக்களாக பிரிந்து நேரில் சென்று பார்வையிட்டனர். இன்று ஒரேநாளில் இவர்கள் 27 இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் அதுகுறித்து பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி, 'புயல் எச்சரிக்கை கொடுத்தவுடனே தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றியது. கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கு தமிழகஅரசுக்கு பாராட்டுக்கள்'என்று கூறிய அவர், 'எனினும் துரதிர்ஷ்டவசமாக புயல் பாதிப்பு பெருமளவு சேதங்களை ஏற்படுத்தி விட்டது' என்றும் கூறியுள்ளார். மேலும், 'சென்னையில் தண்ணீர் தேங்காமல் வெள்ளப்பாதிப்பினை தடுக்க ஐஐடி போன்ற நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு நிரந்தர தீர்வுக்காணப்படும்' என்றும் கூறினார்.