ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல்
எதிர்க்கட்சி எம்பிக்களின் மொபைல் போன்கள் 'ஹேக்கிங்' செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்தின் ஆதரவுடன் ஹேக்கிங் செய்பவர்கள் தங்களது ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக பல முக்கிய எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று புகார் அளித்தனர். புகார் அளித்த எம்பிக்களின் ஐபோன்களுக்கு இது தொடர்பான எச்சரிக்கையை ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர், பவன் கேரா, கே.சி.வேணுகோபால், சுப்ரியா ஷ்ரினேட், டி.எஸ்.சிங்தியோ மற்றும் பூபிந்தர் சிங் ஹூடா; திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கவலையை வெளிப்படுத்தி இருக்கும் நாடாளுமன்ற குழு
சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மியின் ராகவ் சதா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோரும் 'ஹேக்கிங்' செய்யப்பட்டது தொடர்பான எச்சரிக்கையை பெற்றுள்ளனர். மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசு தங்களை வேவு பார்ப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை நேற்று மறுத்த மத்திய அரசு, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறியது. இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்த, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு(IT) வரவிருக்கும் கூட்டத்தின் போது ஆப்பிள் அதிகாரிகளை சம்மன் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. மேலும், நாடாளுமன்ற நிலைக்குழு இந்த விவகாரம் தொடர்பாக கவலையை வெளிப்படுத்தியுள்ளது என்றும், இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்து விசாரிக்க உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.