நாடாளுமன்ற அமர்வு 2024: எதிர்கட்சியினரின் அமளியால் ஜூலை 1 வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை
NEET-UG தேர்வில் முறைகேடுகள் மற்றும் இந்தத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) மீதான விமர்சனங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்களின் அமளியால் மக்களவை மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டும் ஜூலை-1 திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இரு அவைகளிலும் இந்த பிரச்னைகள் மீது விவாதம் நடத்த ஒத்திவைப்பு தீர்மானங்களை சமர்ப்பித்தனர். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
நீட்-யுஜி முறைகேடுகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற INDIA கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானங்களை முன்வைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி.க்கள் ரஞ்சீத் ரஞ்சன் மற்றும் கௌரவ் கோகோய் ஆகியோர் லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை தாக்கல் செய்தனர். மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா சமீபத்தில் இறந்த உறுப்பினர்களின் இரங்கல் குறிப்புகளை வாசிப்புடன் தொடங்கியது. இந்த அஞ்சலிகளைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையை முதலில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் அவை முதலில் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. எனினும், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் போராட்டத்தால் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இளைஞர்களுக்கு பாராளுமன்றத்தில் இருந்து செய்தி அனுப்ப விரும்பினேன்: ராகுல் காந்தி
எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, "ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முன், நாட்டில் உள்ள பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு, அரசும் எதிர்க்கட்சிகளும் உங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்ற செய்தியை நாடாளுமன்றத்தில் இருந்து அனுப்ப விரும்பினோம். அதனால்தான் நாங்கள் விவாதிக்கும் முன் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினோம்"எனத்தெரிவித்தார். ராஜ்யசபாவிலும் இதே போன்ற காட்சிகள் வெளிப்பட்டன. INDIA எம்.பி.க்களின் நீட் விவாதத்திற்கான கோரிக்கைகளுக்கு மத்தியில் தலைவர் ஜக்தீப் தன்கர் நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.
NEET-UG சர்ச்சையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்: ரிஜிஜு
இதற்கிடையில், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு , நீட்-யுஜி சர்ச்சை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என்றும், ஆனால் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிறகுதான் பதில் அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த நிலையில் NEET வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது. வியாழன் அன்று, நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் இரண்டு நபர்களை பீகார் மாநிலம் பாட்னாவில் காவலில் வைத்து சிபிஐ தனது முதல் கைது நடவடிக்கையை செய்தது.