
பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம்
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை (மே 9) இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை அனுப்பியதால் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.
இதற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் உடனடி மற்றும் உறுதியான பதிலடியைக் கொடுத்தனர்.
கடுமையான மோதலில், பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ட்ரோன்களில் ஒன்று வெடிபொருளை வீசியது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர். இந்த வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அவர்களில் ஒரு பெண் உட்பட, பலத்த காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவ சிகிச்சை
உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர மருத்துவ சிகிச்சை
மருத்துவ சேவையை மேற்பார்வையிடும் டாக்டர் கமல் பாகி, ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான தீக்காயங்களுக்கு ஆளானதாகவும், மற்ற இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு ஒப்பீட்டளவில் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார்.
ஃபெரோஸ்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் பூபிந்தர் சிங் சித்து கூறுகையில், "மூன்று பேர் காயமடைந்து தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் வந்தன.
மருத்துவர்கள் தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பெரும்பாலான ட்ரோன்கள் ராணுவத்தால் வீழ்த்தப்பட்டன." என்றார்.
பாகிஸ்தான் அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து ட்ரோன்களை அனுப்புவதற்கு, இந்திய பாதுகாப்புப் படைகள் உரிய பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.