'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(POK) இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து PoK தங்களுடையது என்று கூறினாலும் எதையும் சாதிக்க முடியாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "பாதுகாப்பு மாநாட்டில்" இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அவர், நாட்டின் பாதுகாப்பு பொறிமுறையின் உள் மற்றும் வெளிப்புற பரிமாணங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "PoK சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகும். அது பாகிஸ்தானுக்கு சொந்தமாகாது. PoK இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, குறைந்தது மூன்று முன்மொழிவுகள் இப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன." என்று கூறியுள்ளார்.
"பாஜக 370வது பிரிவை ரத்து செய்து நீதியை வழங்கியது": ராஜ்நாத் சிங்
"ஜம்மு-காஷ்மீரின் பெரும் பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் நிம்மதியாக வாழ்வதை மறுபக்கத்தில் உள்ள மக்கள் பார்க்கிறார்கள். POKயில் வாழும் மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களும் ஒரு நாள் இந்தியாவுடன் செல்ல கோரிக்கையை எழுப்புவார்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து பேசிய அவர், பல தசாப்தங்களாக அநீதி இழைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பாஜக அந்த சட்டத்தை ரத்து செய்து நீதியை வழங்கியது என்று கூறியுள்ளார். "370வது பிரிவை ரத்து செய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெறுப்பு மற்றும் பிரிவினைவாதத்தின் மூலம் பிழைப்பை நடத்துபவர்களுக்கு மட்டுமே இது பிரச்சனையாக இருக்கிறது." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.