
'எப்போது, எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை படைகள் சுதந்திரமாக முடிவு செய்யலாம்': அதிரடி முடிவெடுத்த பிரதமர்
செய்தி முன்னோட்டம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை "முழு செயல்பாட்டு சுதந்திரத்தை" வழங்கியதாக அரசாங்க வட்டாரங்கள் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளன.
டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
90 நிமிடம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் ஆகிய முப்படைத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
உறுதிப்பாடு
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மீண்டும் உறுதிபட கூறிய பிரதமர்
உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தின் போது, பிரதமர் மோடி,"பயங்கரவாதத்திற்கு கடுமையான அடியை வழங்குவது நமது தேசிய உறுதிப்பாடு" என்று மீண்டும் உறுதிப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தின் போது, இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் அவர் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும் எந்தவொரு இராணுவ பதிலடியின் முறை, இலக்குகள் மற்றும் நேரத்தை தீர்மானிக்க அவர்களுக்கு "முழு செயல்பாட்டு சுதந்திரம்" இருப்பதாக மூத்த பாதுகாப்புத் தலைமையிடம் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அரசாங்கத்தின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தக் கூட்டம் நடைபெற்றது .