
பஹல்காம் தாக்குதலுக்கு ஏப்ரல் 22 நண்பகலை தேர்வு செய்தது எதற்காக? மேலும் 3 டூரிஸ்ட் இடங்களும் இலக்காக இருந்ததாம்!
செய்தி முன்னோட்டம்
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
வகுப்புவாத கலவரத்தை தூண்டும் நோக்கத்தில், குறிப்பிட்ட மதத்தவரை தேர்வு செய்து சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, இஸ்லாமிய நம்பிக்கையின் புனித வெளிப்பாடான கலிமாவை ஓத கட்டாயப்படுத்தப்பட்டதாக சம்பவத்தில் தப்பியவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் படுகொலை, "வகுப்புவாதச் செய்தியை" அனுப்பும் ஒரு உத்தியின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த தாக்குதல் மிகுந்த திட்டமிடலுடன் நடத்தப்பட்டதாக டைம்ஸ் நவ் செய்தி குறிப்பிடுகிறது. அந்த செய்தியின்படி தீவிரவாதிகளின் இலக்கு பைசரன் பள்ளத்தாக்கு மட்டுமல்ல என கூறுகிறது.
தாக்குதல்
நான்கு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்
ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் பஹல்காமில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்கா உட்பட மேலும் மூன்று பகுதிகளை பயங்கரவாதிகள் சோதனை செய்துள்ளனர் என இந்தியா டுடே செய்தி கூறுகிறது.
மொத்தமாக, பஹல்காமில் நான்கு இடங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர், ஆனால் பின்னர் மூன்று பகுதிகளில் பலத்த பாதுகாப்பு இருந்ததால், பைசரன் புல்வெளிகளில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்க முடிவு செய்ததாக டைம்ஸ் நவ் கூறுகிறது.
ஆரம்பத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த மற்ற மூன்று இடங்கள் பஹல்காமில் உள்ள அரு பள்ளத்தாக்கு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் பேத்தாப் பள்ளத்தாக்கு ஆகியவை ஆகும்.
தாக்குதல் நடந்த இடம் அதிக பாதுகாப்பு இல்லாததாலும், உயிர் பிழைத்தவர்கள் தப்பிப்பது சிரமம் என்பதாலும் பைசரன் பள்ளத்தாக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
நாள் மற்றும் நேரம்
மத அடிப்படையில் செவ்வாய்கிழமையை தேர்வு செய்த தீவிரவாதிகள்
செவ்வாய்க்கிழமை - இந்து மதத்தில் மத முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பயங்கரவாதிகள் வேண்டுமென்றே ஏப்ரல் 22 -செவ்வாய்க்கிழமை- தேர்ந்தெடுத்ததாக டைம்ஸ் நவ் செய்தி குறிப்பிடுகிறது.
ஆரம்பத்தில், பயங்கரவாதிகள் ஏப்ரல் 18 அன்று தாக்குதலை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்றும், ஆனால் தாக்குதல் இந்துக்களை மையமாக கொண்டு நடத்தப்படுவதால், ஏப்ரல் 22-இற்கு ஒத்திவைக்கப்பட்டது என்று மேலும் கூறியது.
தாக்குதலுக்கு முன் பயங்கரவாதிகள் இந்த இடங்களை 15 முதல் 20 நாட்கள் அந்தப் பகுதியை நோட்டமிட்டதாகவும் அறியப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தை, புல்வெளிகளில் அவர்கள் தங்குவது உட்பட அவர்கள் ஆய்வு செய்து, அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், உச்சக்கட்ட நெரிசல் நேரத்தை கணக்கிட்டு, நண்பகலை தேர்வு செய்ததாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
முன்னாள் ராணுவ கமாண்டோ
பஹல்காம் கொலையாளி முன்னாள் பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ ஆவார்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு நிறுவனங்கள் அடையாளம் கண்டுள்ளன.
அவர்களில் இருவர் - லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது துணை சைஃபுல்லா கசூரி - பாகிஸ்தானில் உள்ளனர்.
மூன்றாவது, ஹாஷிம் மூசா தெற்கு காஷ்மீரின் காடுகளில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
ஆதாரங்களின்படி, ஹாஷிம் மூசா பாகிஸ்தானின் சிறப்பு சேவைக் குழுவில் பாரா-கமாண்டோவாக பணியாற்றியுள்ளார்.
பின்னர் அவர் லஷ்கர்-இ-தொய்பாவில் சேர்ந்தார், அதன் பின்னர் பல பயங்கரவாத தாக்குதல்களில் பங்கேற்றுள்ளார்.
அவர் 2023 இல் இந்தியாவிற்குள் நுழைந்ததாக அறியப்படுகிறது.