Page Loader
மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம்
இந்திய குடிமக்களுக்கு கட்டுப்பாடு விதிக்க அவர் யார்: ஒவைசி ட்விட்டரில் கேள்வி

மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம்

எழுதியவர் Sindhuja SM
Jan 12, 2023
02:30 pm

செய்தி முன்னோட்டம்

RSS தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கள் மதவெறியை தூண்டுவது போல் இருப்பதாக ஹைதரபாத் எம்பி ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். RSS இதழுக்காக அதன் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. "பல காலமாக அந்நிய சக்தியை எதிர்த்து நாம் போர் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போதைய போர் நமக்குள் நடந்து கொண்டிருக்கிறது. நம் இந்து தர்மத்தை காப்பதற்காக நடந்து கொண்டிருக்கிறது. அதனால், இந்துக்கள் ஆக்ரோஷமாக இருப்பது இயற்கை. இஸ்லாமியர்கள் எங்களை கண்டு பயம் கொள்ள தேவையில்லை. ஆனால், அவர்கள் தனியுரிமை கேட்பதைக் கைவிட வேண்டும். இந்துஸ்தான் எப்போதும் இந்துஸ்தானாக இருக்க வேண்டும்." என்று அந்த பேட்டியில் RSS தலைவர் கூறி இருந்தார்.

ஒவைசி

அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

இந்த பேட்டி தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. "இந்திய சட்டத்திற்கு எதிராக மோகன் பகவத் பேசியுள்ளார். அவரது பேச்சு மத வெறியை தூண்டுவது போல் இருக்கிறது. சிறுபான்மையினருக்கு நேரடியாக அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார்." என்று CPIM இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. "அவரது பேச்சு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி இருக்கிறது. அவரது பேச்சின் மூலம் RSSஇன் பிரித்து ஆளும் கொள்கை வெளிப்பட்டிருக்கிறது. இதை நாம் ஒன்றாக சேர்ந்து எதிர்க்க வேண்டும்." என்று CPI மாநில செயலாளர் டி.ராஜா கூறி இருக்கிறார். "இஸ்லாமியர்களுக்கு அனுமதி கொடுக்க அவர் யார்? இந்திய குடிமக்களுக்கு கட்டுப்பாடு விதிக்க அவர் யார்? யாருக்கும் பணிந்து போக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என்று எம்பி ஒவைசி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.