குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, எழுந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை ஆட்சியர் இதை நேரில் சென்று விசாரித்தார். அப்போது, அந்த பகுதி மக்கள் இன்னும் தீண்டாமை செயல்களை பின்பற்றுவது தெரியவந்தது. இதை ஒழிப்பதற்கு தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கான கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
முதல்வர் உரையின் சுருக்கம்
புதுக்கோட்டையில் நடந்த சம்பவம் கண்டிக்கப்பதக்கது. அது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது. சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் தற்போது அந்த கிராமத்திற்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நீரின் மாதிரி பரிசோதிக்கப்பட்டு சுத்தமாக பாதுகாக்கப்படுகிறது. தற்போது, அந்த கிராமத்தில் உள்ள 32 வீடுகளுக்கும் 2 லட்சம் செலவில் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 7 லட்சம் செலவில் புதிய குடிநீர் தொட்டியும் அமைக்கப்படவுள்ளது. குற்றவாளிகளை கண்டறிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. உண்மையான குற்றவாளிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம உரிமை மற்றும் மனிதநேயம் கொண்ட மனிதர்களாக நாம் வாழ வேண்டும். இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்யும் குற்றவாளிகளின் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.