"கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி
"வீட்டில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக்கொள்ளுங்கள்" என்று இந்துக்களுக்கு அறிவுரை கூறி எம்பி பிரக்யா சிங் தாகூர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று கர்நாடகாவில் நடந்த இந்து ஜாக்ரனா வேதிகே வருடாந்திர கூட்டத்தில் பேசிய இவர், "இந்த உலகில் அடக்குமுறை செய்பவர்களையும் பாவிகளையும் வெளியேற்றும் வரை அன்பின் உண்மையான அர்த்தம் நிலைத்து நிற்காது. எனவே, 'லவ் ஜிகாத்'தில் ஈடுபடுபவர்களையும் பாவிகளாகவே நாம் கருத வேண்டும். அவர்களிடம் இருந்து உங்கள் மகள்களைக் காத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எல்லாவற்றிலும் 'ஜிகாத்' செய்கிறார்கள். அன்பிலும் கூட! அதனால், உங்கள் வீட்டில் கூர்மையான கத்திகளை வைத்திருங்கள். நமக்கு தற்காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. யாராவது அத்துமீறி நம் வீட்டிற்குள் நுழைந்தால் நாம் யார் என்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பல்வேறு தரப்பினர் கண்டனம்!
இவர் கூறிய இந்த கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு, கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங் கார்கே, "ஒரு MP இப்படி ஒரு கருத்தை கூறி இருப்பது நல்லதற்கு இல்லை. நாங்கள் இதற்கு அவர் மீது புகார் அளிக்கவுள்ளோம்" என்று கூறி இருகிறார். அவர் மீது தேசவிரோத குற்றம் போடவேண்டும் என்று ம.பி காங்கிரஸ் கோரியுள்ளது. இது குறித்து ட்வீட் செய்த ஜம்மு-காஷ்மீர் பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, "முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஒரு பாஜக எம்பி வெளிப்படையாக கூறி இருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ஆனால், அவர் கூறி இருக்கும் இந்த கருத்தை இந்திய அரசு கண்டுகொள்ள மறுக்கிறது." என்று குறிப்பிட்டிருக்கிறார்.