ஹத்ராஸ்: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ராகுல் காந்தி
ஜூலை 2 ஆம் தேதி ஹத்ராஸில் நடந்த ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் இறந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மதக்கூட்டத்தை நடத்திய 'போலே பாபா' என்பவர் தலைமறைவாகியுள்ளார். அதோடு இந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்த முக்கிய பிரமுகரும், FIR இல் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுபவரும் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில், இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்
இந்த நிலையில் ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சென்று சந்தித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பாக கேள்வி எழுப்பப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். இதற்கிடையில், ஹர்த்ராஸில் உள்ள போலே பாபா ஆசிரமத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு, உத்தரப்பிரதேச அரசு இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை அமைத்ததுள்ளது.