
பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு
செய்தி முன்னோட்டம்
திமுக'வின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா நினைவுச்சின்னம் ஒன்றினை ரூ.81 கோடி செலவில் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்து வருகிறது.
ஏற்கனவே கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் பின்பகுதியில் பெரிய கேட் ஒன்று அமைத்து கண்ணாடி பாலம் நிறுவி அதன் மீது மக்கள் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தினை பார்வையிடும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட நினைவுச்சின்னத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில்,
இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்தது. பலதரப்பட்ட வழக்குகள் இது சம்பந்தமாக போடப்பட்டுள்ளது.
மெரினா
நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சங்கம் மனுதாக்கல்
இந்நிலையில் மெரினாவில் இந்த நினைவு சின்னத்தினை அமைக்க மத்திய அரசு 15 நிபந்தனைகளுடன் மாநில அரசுக்கு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனையடுத்து தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
மேலும் அவர் உச்ச நீதி மன்றத்தில் இது குறித்து மனு தாக்கலும் செய்துள்ளார்.
ஏற்கனவே மீனவர்கள் சங்கம் சார்பில் இந்த பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜெயகுமாரும் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.