சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் கடலுக்குள் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்து வருகிறது. இதற்கான கருத்துக்கேட்புக்கூட்டம் அண்மையில் நடைபெற்ற நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்தார். அதில் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இத்திட்டத்தின் மூலம் அதிகம் உள்ளது என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் மத்திய அரசு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை விதிகளின் கீழ் இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
கருத்துக்கேட்பு கூட்டம் குறித்து கேள்வியெழுப்பிய நீதித்துறை உறுப்பினர்
இந்த மனுவானது கடந்த டிசம்பர் மாதம் 16ம்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர் மனுதாரர்கள் பதில் மனுதாக்கல் செய்தபிறகு, இந்த மனுவை ஏற்பது குறித்து முடிவெடுப்பதாக கூறப்பட்டது, விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தமனு மீதான விசாரணை நேற்று(பிப்.,2)மீண்டும் வந்தப்போது கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். அதனை ஏற்கமறுத்த நீதித்துறை உறுப்பினர், கருத்துக்கேட்பு கூட்டம் முறையாக நடத்தப்பட்டதா என்று பல கேள்விகளை கேட்டுள்ளார். இதுவரை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை மட்டுமே பதில் மனுதாக்கல் செய்துள்ளார்கள். தொடர்ந்து, மத்திய,மாநில அரசுத்துறை சார்ந்த சுற்றுசூழல்துறை, மீன்வளத்துறை, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் உள்ளிட்ட அரசுத்துறைகளும் மனுதாக்கல் செய்யக்கூறி, மார்ச் 2ம்தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.