சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை
முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். இவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அங்கு 2.23ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டும் பணி அரசு சார்பில் ஏற்கனவே நடந்து வருகிறது. இந்நிலையில் இது இல்லாமல், நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்திற்கு பிரமாண்ட 'பேனா' நினைவுசின்னம் ஒன்றினை அமைக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இந்நிலையில் இது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று(ஜன.,31) கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அளித்ததோடு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து பேசவும் செய்துள்ளார்.
பேனா நினைவு சின்னம் வைப்பதால் சுற்றுசூழலில் பாதிப்பு ஏற்படும்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஐயா கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை, ஆனால் கடலில் வைக்கக்கூடாது. அது சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 360 மீட்டர் கடலுக்குள் 8551.13 சதுரமீட்டர் பரப்பை இதற்காக எடுக்கிறார்கள். கிட்டத்தட்ட அரை ஏக்கர் கடலில் எடுக்கப்படுகிறது. கடலுக்குள் கல், மண்ணை கொட்டி அதன்மேல் அந்த பேனாவை நிறுவ வேண்டும். அதனை பார்க்க செல்லும் மக்கள் குப்பைகளை கடலில் நிச்சயம் எரிந்து செல்வர். ஏற்கனவே இந்திய நிலப்பரப்பு அளவிற்கு கடலுக்குள் குப்பை உள்ளதாக கூறப்படும் நிலையில் இது மேலும் குப்பையை அதிகரிக்கக்கூடும் என்று கூறினார். மேலும் எதிர்ப்புகளை மீறி கடலுக்குள் நினைவுச்சின்னம் வைத்தால் ஒருநாள் எங்கிருக்கிறது என்று தெரியாமல் போய்விடும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.