கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு
சென்னையில் இயங்கி வந்த கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தால், சிட்டிக்கு உள்ளே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதென்று, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் துவங்கப்பட்டது. பொங்கலுக்கு முன்னர் திறக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்திலிருந்து, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் பொங்கலுக்கு ஆம்னி பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்திருந்ததால், பொங்கல் முடியும் வரை ஆம்னி பஸ்கள் அங்கிருந்து இயக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துகள் உயர்தரத்தில் மாற்றியமைக்கப்படும் என உறுதி அளித்த அமைச்சர்
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், "100 மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டிருக்கிறது. மின்சார பேருந்து என்பது நமக்கு புதிது. இங்கே ஓட்டுநர்களாக பணியாற்றுகிறவர்களுக்கு அதனை கையாளும் அனுபவம் கிடையாது. பேருந்து சப்ளை செய்பவர்களே அதனை பராமரிக்கும் பணியையும் செய்ய வேண்டும்" என்று மேலும் தெரிவித்துள்ளார். "யணிகள் படிகளில் தொங்கியபடி செல்வதை தடுக்க சிகப்பு நிற டீலக்ஸ் பேருந்துகளில் இருப்பது போன்று சாதாரண கட்டணம் வசூலிக்க கூடிய MTC பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. கம்பிகளை பிடித்து தொங்குவதை தடுக்கவும் தனியியங்கி கதவுகள் மட்டுமல்லாது கதவுகள் அருகே உள்ள ஜன்னல் பகுதியும் முழுமையாக கண்ணாடிகள் கொண்டு திறக்க முடியாத வகையில் அடைக்கப்பட்டுள்ளது" என அமைச்சர் கூறினார்.