ஓ.பன்னீர் செல்வத்தினை ஒதுக்கவில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட இருவரும் இணைந்து நேற்று(ஆகஸ்ட்.,2) கொடநாடு கொலை வழக்கில் அதீத கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுத்து வழக்கினை முடிக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்.,2) புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக மாநில தலைவரான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் இந்த கொடநாடு விவகாரம் குறித்தும், தேனியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிகிறது. அதற்கு பதிலளித்த அவர், இந்த வழக்கின் விசாரணை நடுநிலையாக நடத்தப்பட வேண்டும் என்றும், யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை அளிக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு
தொடர்ந்து பேசிய அவர், "எங்களை பொறுத்தவரையில் ஓ.பன்னீர் செல்வத்தினை நாங்கள் ஒதுக்கவில்லை. அவர் விரக்தியில் இல்லை" என்று கூறியுள்ளார். மேலும், ஓ.பன்னீர் செல்வம் முதல் அமைச்சர் பதவி உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து அவர், பாஜக அதிகாரபூர்வமாக அதிமுக கட்சியுடன் கூட்டணியில் தான் இருக்கிறது என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஓ.பன்னீர் செல்வத்தினை பாஜக ஒதுக்கவில்லை என அண்ணாமலை பேசியது, அதிமுக பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.