எதிர்ப்புக்கு மத்தியில் அரசாங்கத்தின் முன்மொழிவை நிராகரித்தனர் விவசாயிகள்
ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த விலையில் பயிர்களை கொள்முதல் செய்யும் அரசின் திட்டத்தை விவசாயிகள் நிராகரித்ததோடு, புதன்கிழமை (பிப்ரவரி 21) டெல்லிக்கு செல்லும் தங்கள் பேரணியை தொடரப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு மற்றும் கானௌரி ஆகிய இடங்களில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி, மின் கட்டண உயர்வு, போலீஸ் வழக்குகளை திரும்பப் பெறுதல் மற்றும் 2021இல் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதி" வழங்குதல் ஆகியவற்றை கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
"எங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்": விவசாயிகள்
கடந்த வாரம் முதல் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் அரசாங்கக் குழுவிற்கும் இடையிலான நான்காவது பேச்சு வார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலையில்(MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை வாங்க அரசாங்கம் முன்மொழிந்தது. இந்நிலையில், அந்த முன்மொழிவை விவசாயிகள் நிராகரித்துள்ளனர். "எங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் அல்லது தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்." என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.