மோடி அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இன்று மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது . பிரதமர் மோடியின் உரையை தொடர்ந்து, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த ஓட்டெடுப்பின் இறுதியில், இந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. மணிப்பூர் இனக்கலவரம் குறித்து பிரதமர் மோடி மௌனம் சாதிப்பதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள், கடந்த ஜூலை மாதம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்தன. ஏறக்குறைய மூன்று மாதங்கள், பெரும்பான்மையான மெய்டீஸ் மற்றும் பழங்குடி குக்கிகளுக்கு இடையிலான இன மோதல் குறித்து அவர் அமைதியாக இருந்தார். பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகும் வரை மௌனம் காத்த பிரதமர், இது குறித்து சரியான விளக்கத்தை அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரின.
2028 இல், மீண்டும் சந்திப்போம்: மோடி
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இறுதி நாளான இன்று, மாலை 5 மணியளவில் தனது உரையை தொடங்கினர் பிரதமர். இதனிடையே, உரை தொடங்கி 1:30 மணி நேரம் ஆனபின்னரும், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பேசவில்லை என எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய பிரதமர், "உண்மையாகவே பிரச்னை குறித்து விவாதம் செய்ய எண்ணம் இருந்திருந்தால், எதிர்க்கட்சிகள் நேற்றே விவாதத்தை தொடங்கி இருக்கலாம். மாறாக, அவர்கள் மக்கள் பிரச்னையில் அரசியல் ஆதாயம் காணப்பார்க்கிறார்கள்" என்றார். இதை தொடர்ந்து, "கடந்த 5-வருடங்களில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அவர்கள் தயாராகவே இல்லை. 2028-இல், அவர்கள் வலுவான தாக்குதல்களுடன் வருவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் பாராளுமன்றத்திற்கு வரும்போது கொஞ்சம் தீவிரம் காட்டுவது முக்கியம்" என மோடி கூறினார்.