பயணிகளின் வசதிக்காக சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை இன்று (செப்.9) முதல் தொடக்கம்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு ஒரு மின்சார ரயிலும், திருவள்ளூருக்கு இரண்டு மின்சார ரயில்களும் தென்னக ரயில்வேயால் திங்கட்கிழமை (செப்டம்பர் 9) முதல் கூடுதலாக இயக்கப்படுகிறது. முன்னதாக தென்னக ரயில்வே, கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் திங்கட்கிழமை முதல் மூன்று புதிய ரயில் சேவை இயக்கப்படும் என அறிவித்தது. இதன்படி, திங்கட்கிழமை முதல் ரயில் எண். 43012, ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே இயங்குகிறது. இதன் முதல் பயணம் ஆவடியில் இருந்து காலை 9.50 மணிக்கு தொடங்கியது. ரயில் எண். 43219 திருவள்ளூரில் இருந்து காலை 10:40மணிக்கு கிளம்பி சென்னை சென்ட்ரலுக்கு சென்றது. அதேபோல் மற்றொரு ரயில் திருவள்ளூரில் இருந்து மாலை 3.50 மணிக்கு கிளம்பி சென்ட்ரல் நோக்கி சேவையைத் தொடங்கியது.
ரயில் சேவை நீட்டிப்பு
புதிய ரயில் சேவைகளைத் தவிர சில ரயில் சேவைகள் திங்கட்கிழமை கூடுதல் தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரயில் எண். 42017 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.10க்கு கிளம்பி கும்மிடிப்பூண்டி வரை இயங்கி வந்த நிலையில் தற்போது சூல்லூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரயில் எண். 40202, இரவு 8.55க்கு கூடுவாஞ்சேரியில் இருந்து கிளம்பி தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் எண். 40206, இரவு 10.11 மணிக்கு கூடுவாஞ்சேரியில் இருந்து கிளம்பி தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரயில்களின் நேரம் மாற்றம்
மேலும், ரயில் எண். 40208, இரவு 10.55 மணிக்கு கூடுவாஞ்சேரியில் இருந்து கிளம்பி தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் எண். 40210, இரவு 11.20 மணிக்கு கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவை தவிர சென்னையில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் மின்சார ரயில் சேவைகளின் திங்கட்கிழமை முதல் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, அரக்கோணம் வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி, சூல்லூர்பேட்டை வழித்தடத்தில் இயங்கும் ரயில்களும் சுமார் 5 முதல் 15 நிமிடங்கள் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் இயங்க ஆரம்பித்துள்ளது.