வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்து உருவான மூன்று புயல்களும் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்ததால், தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாமல் பருவமழைப் பற்றாக்குறை நிலவி வந்தது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நீடித்து வந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் மீண்டும் மழைக்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளதாகவும், இது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, டிசம்பர் 2-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இன்று தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்களான இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை
நாளை மழை பெய்யும் மாவட்டங்களின் பட்டியல்
நாளை (நவம்பர் 28) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழைப் பொழிவு தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் நவம்பர் 30-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.