ஆன்லைன் மோசடி, போதை பொருள் கும்பலிடம் இருந்து தப்பிய சென்னை பெண்
சில தினங்களுக்கு முன்னர் குருகிராமில் வசிக்கும் இருவர், சைபர் மோசடி செய்பவர்களால் கிட்டத்தட்ட ரூ. 2 கோடி இழந்த செய்தி வெளியான நிலையில்,சென்னையைச் சேர்ந்த லாவண்யா மோகன் என்ற மார்க்கெட்டிங் நிபுணர் ஒருவரும், தானும் அதேபோன்றதொரு மோசடி கும்பலிடம் ஏமாற இருந்ததாகவும், சற்று சுதாரித்ததால் தப்பித்ததாகவும் கூறியுள்ளார். அந்த மோசடி கும்பல், தாய்லாந்திற்கு போதைப்பொருள் அனுப்புவதற்கு அவருடைய ஆதார் எண்ணை பயன்படுத்தவிருப்பதாக கூறி இவரை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக இதுதொடர்பாக பதிவிட்ட லாவண்யா மோகன், தனது ஐடியைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கூறி, FedExஇன் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகியைப் போல் ஒரு மோசடி நபர் தன்னிடம் உரையாடியதை விவரித்தார்.
ஆள் மாறாட்டம் செய்த மோசடி நபர்கள்
"இரண்டு வாரங்களுக்கு முன்பு, குர்கானைச் சேர்ந்த ஒருவர் மோசடி செய்பவரிடம் 56 லட்சங்களையும் மற்றொருவர் 1.3 கோடியையும் இழந்ததாகச் செய்தி வந்தது. இன்று எனக்கு அதே அழைப்பு வந்தது". "FedEx இன் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி அழைத்து உங்கள் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார். போலி பேக்கேஜ் விவரங்கள், எஃப்ஐஆர் எண் மற்றும் அவர்களின் சொந்த போலி ஊழியர் ஐடி ஆகியவற்றையும் வழங்கினார்". "பின்னர் அழைப்பாளர் அவரை ஒரு சுங்க அதிகாரியுடன் இணைத்து பிரச்சினையை தீர்க்க முன்வந்தார்". "மேடம், நீங்கள் புகாரைத் தொடரவில்லை என்றால், உங்கள் ஆதார் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்படும். எனவே இணையக் குற்றப் பிரிவுடன் உங்களை உடனே இணைக்கிறேன்" என்று எச்சரித்ததாக லாவண்யா குறிப்பிட்டார்.
சுதாரித்த லாவண்யா
அந்த மர்ம நபர், உடனடியாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு தன்னிடம் பேசியதாகவும், அதனால் உடனே இதை தடுக்க ஒரு புகாரை இப்போதே பதிவு செய்துவிடுங்கள் என தன்னை மீண்டும் மீண்டும் நச்சரித்ததாக கூறுகிறார் லாவண்யா. உடனே சுதாரித்த லாவண்யா, இது போன்ற ஒரு சீரியஸான பிரச்சனையில் டெலிவரி சேவை தனிநபரை நேரடியாக தொடர்புகொள்வது சாத்தியமில்லை என்றும், அப்படி ஒரு வேளை ஐடி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், காவல்துறையினர் நேரில் வந்து தெரிவித்திருப்பார்கள் என உணர்ந்ததாகவும் கூறினார். அதனால்,"எப்படியும், போலீஸிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு பேசும் வரை நான் காத்திருக்கிறேன்" என கூறி அந்த மோசடி நபரின் கால்-ஐ கட் செய்துவிட்டாராம்.
லாவண்யாவின் ட்வீட்
"Ma'am, if you don't go ahead with the complaint, your Aadhar will continue to be misused so let me connect you right away with the cyber crime branch" Threatening consequences + urgency = scam.— Lavanya Mohan (@lavsmohan) March 5, 2024