
தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர்; போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை பாஜக தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், தற்போதுவரை வேறு எந்த வேட்புமனுவும் சமர்ப்பிக்கப்படாததால், தமிழக பாஜகவின் புதிய தலைவராக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அவரை தலைவராக்க முன்மொழிந்துள்ளனர்.
தேர்தல் பொறுப்பாளர் சக்கரவர்த்தியின் கூற்றுப்படி, நயினார் நாகேந்திரன் மட்டுமே இந்தப் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இன்று மாலை 4 மணி வரை வேட்புமனுக்கள் திறந்திருக்கும் நிலையில், வேறு எந்த வேட்பாளர்களும் முன்வரவில்லை என்றால், நாகேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.
அமித்ஷா
அமித்ஷா முன்னிலையில் அறிவிக்கப்படும் என தகவல்
குறிப்பிடத்தக்க வகையில், மாநிலத் தலைமைப் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் உறுப்பினர் பதவியில் இருக்க வேண்டும் என்ற வழக்கமான தகுதித் தேவையையும் கட்சி தளர்த்தியுள்ளது.
இதனால் நயினார் நாகேந்திரனின் வேட்புமனு சாத்தியமாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகை தந்ததன் பின்னணியில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அமித்ஷாவின் வருகை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தைகளும் இந்த பயணத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அமித்ஷா முன்னிலையில், செய்தியாளர் சந்திப்பில் இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சலி
தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை மறைவிற்கு அஞ்சலி
முன்னதாக, முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்திற்கு சென்று குமரி ஆனந்தனின் மறைவிற்கு அமித்ஷா இரங்கல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து கலந்துரையாடினார்.
இதற்கிடையே, பாஜகவின் தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, அமித்ஷாவின் வருகை தொடர்பான அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஆதரித்து கமலாலயத்தில் கட்சித் தலைவர்களுடன் இணைந்தார்.
நயினார் நாகேந்திரனுடன் அவர் இருப்பது மாநில பாஜகவில் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றாலும், பாஜகவின் முகமாக அண்ணாமலையே முன்னிறுத்தப்படுவார் என்பதை காட்டுவதாக உள்ளது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.