LOADING...
தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தாக்கம் அதிகரித்து வருகிறது

தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 04, 2025
09:58 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தாக்கம் அதிகரித்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. இந்த பருவமழை ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையின் தாக்கம் தென் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாகக் காணப்பட்டு வந்தாலும், சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2°C முதல் 5°C வரை உயர்ந்துள்ளதைக் கவனிக்க முடிகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் வெப்பநிலை 5°C-க்கு மேல் அதிகரித்துள்ளது. திருநெல்வேலி, நீலகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3°C முதல் 5°C வரை அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை

சென்னையில் பருவ மழையின் தாக்கம்

சென்னையில் நேற்று வெயில் அதிகமாக இருந்த நிலையில், பகலில் திடீரென வானிலை மாறி பல பகுதிகளில் மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணிநேரம் இடியுடன் கனமழை பதிவு செய்யப்பட்டது. இதன் விளைவாக தாம்பரம்-வேளச்சேரி சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். தாம்பரத்திலிருந்து மேடவாக்கம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. எனினும், இன்று சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 99°F (37.2°C) வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.