உக்ரைன் தலைநகர் கியேவை சென்றடைந்த பிரதமர் மோடி; ஆரத்தழுவி வரவேற்ற ஜெலென்ஸ்கி
இரண்டு நாள் போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு உக்ரைனுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் இவர்தான். போலாந்திலிருந்து 10 மணிநேர ரயில் பிரயாணத்தின் மூலம் உக்ரைன் தலைநகர் கீவை சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்கே அவரை உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கைகுலுக்கி வரவேற்றார். பிரதமர் மோடி காலை 7:30 மணியளவில் (உள்ளூர் நேரம் கியேவுக்கு) வந்து, காலை 7:55 மணியளவில் (உள்ளூர் நேரம்) ஹோட்டலுக்கு சென்றடைந்தார். கீவ் வந்தடைந்த பிரதமரை, புலம்பெயர்ந்த இந்தியர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' முழக்கங்களுடன் வரவேற்றனர்.
உக்ரைன் ஜனாதிபதியுடன் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கிய்வில் சந்தித்தார். மரின்ஸ்கி ஜனாதிபதி மாளிகையில் திட்டமிடப்பட்ட இருதரப்பு சந்திப்புக்கு முன்னர், உக்ரைன் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள தியாகிகள் கண்காட்சியின் நுழைவாயிலில் இரு தலைவர்களும் கைகுலுக்கி, அன்பான அரவணைப்பை பரிமாறிக்கொண்டனர். அந்த கண்காட்சியில் போரினால் இறந்து போன குழந்தைகளின் நினைவிடத்தில் இரு தலைவர்களும் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டனர். அப்போது பிரதமர் மோடி, அரவணைப்பாக உக்ரைன் ஜனாதிபதியின் தோள் மீது கை வைத்து ஆறுதல் கூறினார். போலந்தில் இருந்து உக்ரைன் கிளம்பும் முன்னர், "போர்க்களத்தில் எந்த பிரச்சனையும் தீர்க்கப்பட முடியாது" என்று மோடி கூறினார். மேலும்,"அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தை இந்தியா ஆதரிக்கிறது" எனத்தெரிவித்திருந்தார்.