Page Loader
கல்லூரி விடுதிக்குள் தொழுததால் வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல்

கல்லூரி விடுதிக்குள் தொழுததால் வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல்

எழுதியவர் Sindhuja SM
Mar 17, 2024
01:45 pm

செய்தி முன்னோட்டம்

நேற்றிரவு குஜராத் பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த கும்பல், நமாஸ் செய்துகொண்டிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் மாணவர்களைத் தாக்கியதால் ஐந்து சர்வதேச மாணவர்கள் காயமடைந்தனர். மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, குஜராத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசி, குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்து, நியாயமான விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தில் மசூதி இல்லை என்பதால், ரமலான் நோம்பை முடிப்பதற்காக ஒரு விடுதியில் கூடிய இஸ்லாமிய மாணவர்கள் அங்கு தொழுகை நடத்தி இருக்கின்றனர். இந்நிலையில், அதே நேரத்தில், தடி மற்றும் கத்திகளுடன் விடுதிக்குள் நுழைந்த ஒரு கும்பல், அவர்களைத் தாக்கியதுடன், அவர்களின் அறைகளையும் சேதப்படுத்தியதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குஜராத் 

விடுதியில் தொழுகை நடத்த அனுமதித்ததற்காக தடியடி 

விடுதியின் பாதுகாவலர் கும்பலைத் தடுக்க முயன்றதாகவும், ஆனால் அவரால் அந்த கும்பலை தடுக்க முடியவில்லை என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர். தாக்குதல் நடத்திய கும்பலில் இருந்தவர்கள், விடுதியில் தொழுகை நடத்த அனுமதித்தது யார் என்று அதட்டிக் கேட்டதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு மாணவர் கூறியுள்ளார். "அறைகளுக்குள்ளும் சென்று அவர்கள் எங்களைத் தாக்கினர். மேலும், அவர்கள் மடிக்கணினிகள், தொலைபேசிகள் மற்றும் பைக்குகளை சேதப்படுத்தினர்," என்று அவர் கூறியுள்ளார். இதனால், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்த தலா ஒரு மாணவர், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இரு மாணவர்கள் காயமடைந்தனர். "போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் உள்ளனர். தூதரகங்களுக்கு தகவல் கொடுத்துள்ளோம்." என்று ஒரு மாணவர் தெரிவித்துள்ளார்.