Page Loader
'ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி': சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

'ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி': சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

எழுதியவர் Sindhuja SM
Nov 18, 2023
11:26 am

செய்தி முன்னோட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதை அடுத்து, தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றவே இந்த சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஆளுநர் கையெழுத்திடாததால், நான்கு அதிகாரப்பூர்வ உத்தரவுகள் மற்றும் குறைந்தது 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில், இந்த குற்றச்சாட்டை முன்வைத்து, உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது "கடுமையான கவலைக்குரிய விஷயம்" என்று கூறியது. மேலும், "ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்றும் தெரிவித்திருந்தது.

கஜ்வ்ஸ்

இந்நிலையில், இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

எனது உடல்நலனை விட மாநில மக்களின் நலன் தான் எனக்கு முக்கியம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது அவரது கடமை. ஆனால், அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை மனதில் வைத்து கொண்டு, அரசு நிறைவேற்றிய மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். இது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் அவமதிப்பதற்கு சமம். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டியது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியதும், அவர் அவசர அவசராக 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அதை திருப்பி அனுப்பியுள்ளார். அந்த 10 மசோதாக்களும் இன்று மீண்டும் நிறைப்வேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது.