LOADING...
திமுகவில் புதிய அதிரடி; முதல்வரின் மருமகன் சபரீசன் நேரடி அரசியல் வருகை
முதல்வரின் மருமகன் சபரீசன் நேரடி அரசியல் வருகை

திமுகவில் புதிய அதிரடி; முதல்வரின் மருமகன் சபரீசன் நேரடி அரசியல் வருகை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2026
08:50 am

செய்தி முன்னோட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், இதுவரை திரைக்குப் பின்னால் இருந்து திமுகவின் தேர்தல் உத்திகளை வகுத்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாகத் நேரடி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்காக பிரசாரம் மேற்கொண்டதன் மூலம், அவர் தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். திமுகவின் வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் எழும் வேளையில், சபரீசனின் இந்த நேரடி வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் பயணம்

திரைமறைவு உத்தியாளர் முதல் நேரடி பிரசாரம் வரை

சபரீசன், திமுகவிற்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கும் 'பென்' (PEN) என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். கடந்த தேர்தல்களில் திமுகவின் வெற்றிக்காக பல்வேறு நவீன தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தவர் இவரே என்று பரவலாகக் கருதப்படுகிறது. இதுவரை எந்தவொரு பொதுக் கூட்டத்திலோ அல்லது நேரடி பிரசாரத்திலோ பங்கேற்காமல் இருந்து வந்த அவர், தற்போது தனது நெருங்கிய நண்பரும் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான கார்த்திக்கிற்காக வாக்கு சேகரித்துள்ளார். இது திமுகவின் அதிகார மையத்தில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

பிரச்சாரம்

"விஜய்யால் திமுகவுக்கு பாதிப்பில்லை": சபரீசன்

பிரசாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த சபரீசன், அரசியல் சூழல் குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, "விஜய் வருகையால் திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" என்று பதிலளித்தார். திமுக அரசு செயல்படுத்தி வரும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தங்களுக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சபரீசன் கூறினார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement