Loading...
போலி புத்தக ஊழல்: நூலகங்களில் திமுக மோசடி செய்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
நூலகங்களுக்கு போலி புத்தகங்கள் வழங்கி திமுக ஊழல் செய்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு.

போலி புத்தக ஊழல்: நூலகங்களில் திமுக மோசடி செய்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

எழுதியவர் Vasuki
Nov 14, 2026
04:16 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும், டெலிபோன் டைரக்டரி மற்றும் அகராதிகளை (Dictionary) ஜெராக்ஸ் எடுத்தும் போலிப் புத்தகங்களைத் தயாரித்து நூலகங்களுக்கு வழங்கி மிகப்பெரிய அளவில் ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 'புத்தகத் திருவிழா 2026'-ஐ தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நூலகங்களின் பெயரால் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தார்.

திசைதிருப்பல் 

நூலகங்களில் போலிப் புத்தக மோசடி

புத்தகக் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை ரசித்த பின்னர் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இந்தப் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.

ஆனால், கடந்த ஆட்சியில் கலைஞர் நூலகம், பெரியார் நூலகம் எனப் பெயர்களை வைத்துக்கொண்டு ஊழல் செய்யும் நோக்கில் செயல்பட்டவர்கள் தற்போது சிக்கியுள்ளனர்.

டெலிபோன் டைரக்டரி, டிக்ஷனரி ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்தும், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலியான புத்தகங்களைத் தயாரித்தும் நூலகங்களுக்கு வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

நமது ஆட்சியில் இதுபோன்ற முறைகேடுகளுக்கு இடமில்லை. தற்போது பெரியார் நூலக விவகாரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் தொடர்பான விவகாரங்களை திமுகவினர் திசைதிருப்பப் பார்க்கின்றனர். ஆதாரங்களுடன் பேச வேண்டும்" என்றார்.

சட்டம்-ஒழுங்கு

ஜெம் கிரானைட் விவகாரம் மற்றும் நல்லாட்சி

தொடர்ந்து பேசிய அவர், "ஜெம் கிரானைட் வீரமணி விவகாரத்தில் ஒன்றரை ஆண்டுகளாகக் கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது.

இது முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரிந்திருந்தும் குற்றவாளிகள் தப்பிக்க உதவியிருந்தால் அவரும் குற்றவாளிதான்.

கடந்த காலங்களைப் போல் பணம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாமல், தகுதியானவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். இடஒதுக்கீடு புகார் குறித்து திருமாவளவனிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 6 மாதங்களாகத் தமிழகத்தில் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டு நல்லாட்சி வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் அரசியல் குறுக்கீடு இல்லாததால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தீவிரமாக ஒழிக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஆட்சியின் பலம்

மேகதாது அணை விவகாரம் 

மேகதாது அணை விவகாரம் குறித்துப் பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், "திமுகவினரைப் போல் பணத்தை வைத்துக்கொண்டு நாங்கள் மக்களைச் சந்திக்கவில்லை.

முதலமைச்சரின் முகத்தை மட்டுமே முன்னிறுத்தி மக்களைச் சந்திப்பதால் இந்த ஆட்சியை நிச்சயமாகக் கவிழ்க்க முடியாது.

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

கர்நாடகா அடாவடியாகச் செயல்பட்டால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் என்பதால், மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT