'திமுக ஆட்சியிலேயே 4 லட்சம் இந்தி கவர்கள்': ஆதாரத்துடன் இறங்கிய அமைச்சர் அருண்ராஜ்; மாத்திரை கவர் சர்ச்சையில் புதிய திருப்பம்
செய்தி முன்னோட்டம்
அரசு மருத்துவமனை மாத்திரை உறைகளில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரத்தில், திமுக மலிவான அரசியல் செய்வதாகவும், கடந்த திமுக ஆட்சியிலேயே 4 லட்சம் இந்தி மாத்திரை உறைகள் அச்சிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விரிவான கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள அருண்ராஜ்,"கடந்த திமுக ஆட்சியில் 2025 டிசம்பர் 31 அன்று ஈரோடு கூட்டுறவு அச்சகம் மூலம் 4 லட்சம் கவர்கள் அச்சிட அவசர ஆணை வழங்கப்பட்டது. 2026 ஜனவரி மாதமே (திமுக ஆட்சிக் காலத்திலேயே) இந்தி அச்சிடப்பட்ட கவர்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. கோவை மருத்துவமனையிலும் 3 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் இது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்யும் திமுக: வெளுத்தது போலி நாடகத்தின் சாயம்! - விரிவான கண்டன அறிக்கை
— Arunraaj TVK (@arunraajkg) October 7, 2026
எதற்கெடுத்தாலும் மொழியை வைத்து மலிவான அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவினர், தற்போது கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாத்திரை உறைகளைக் கையில்…
சாடல்
திமுகவின் "போலி வேடம்" என சாடல்
தங்கள் ஆட்சியில் இந்தியை அனுமதித்து, அதற்கான வடிவமைப்பு வரைமுறையை உருவாக்கி புழக்கத்தில் விட்டுவிட்டு, தற்போது ஆளுங்கட்சியான தவெக மீது பழிபோடுவது திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம் என்றும், தாங்கள் செய்த வரலாற்றுப் பிழையை மறைக்கவே திமுகவினர் தற்போது மொழிப்போர் காவலர்கள் போல வேடமிடுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
இப்பிரச்சனை அரசின் கவனத்திற்கு வந்தவுடனேயே கரூர் மற்றும் கோவை ஆகிய இரு மருத்துவமனைகளிலும் இந்தி அச்சிடப்பட்ட மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
கரூரில் பழைய நடைமுறைப்படி மத்திய சிறையிலிருந்து கவர்கள் பெறப்பட்டுத் தமிழில் மட்டுமே முத்திரையிடப்படும் பணி உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கோவையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே கொண்ட புதிய கவர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் அருண்ராஜ் உறுதியளித்துள்ளார்.