மணிப்பூர் வன்முறை: தொடர்ந்து ஊரை விட்டு வெளியேறும் மக்கள்
மணிப்பூரில் 73 உயிர்களைக் கொன்று, ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக மாற்றிய இனக் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, மக்கள் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தை விட்டு வெளியேறி கொண்டிருக்கின்றனர். குக்கி பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மக்கள் பலர் மலை பகுதிகளில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாகவும், மெய்தே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளத்தாக்குகளை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறை ஆரம்பித்ததில் இருந்து 5200 குக்கி சமூகத்தினர் மலை மாவட்டங்களில் இருந்து இம்பால் பள்ளத்தாக்குக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் 7472 மெய்தே மக்கள் மலை மாவட்டங்களில் இருந்து இம்பால் பள்ளத்தாக்குக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு(COCOMI) தெரிவித்துள்ளது.
அமைதியை மீட்டெடுக்க மாநிலத்தின் பாஜக அரசாங்கம் முயற்சித்து வருகிறது
மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு(COCOMI), அமைதியை மீட்டெடுக்க மாநிலத்தின் பாஜக அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மணிப்பூரில், 53% மக்கள் மெய்தே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மிக செல்வ செழிப்புடன் அந்த மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், மணிப்பூரில் உள்ள 44% மக்கள் குக்கிகள் மற்றும் நாகாக்கள் உட்பட 33 பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களாவர். மணிப்பூரில் உள்ள ஒன்பது மாவட்டங்களில், ஐந்து மாவட்டங்கள் பழங்குடியினர் வாழும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த பழங்குடியினர்கள் ஜூம் சாகுபடியை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். பள்ளத்தாக்குகளில் பரந்து விரிந்திருக்கும் நான்கு மாவட்டங்களில் பெரும்பாலான மெய்தே சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்ப்பது தொடர்பான பிரச்சனையால் மணிப்பூரில் வன்முறை வெடித்தது.