மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு மாதா கோயில் மெயின் ரோடு ஆற்றங்கரை பகுதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இங்கு நாட்டு வெடிகள், திருமணம், கோயில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு தேவையான வானவெடிகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. மேலும், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதால், அதற்காக வாணவெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது. இங்கு நான்கு தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்த விபத்தில் சிக்கி திருவாவடுதுறையைச் சேர்ந்த கர்ணன் என்பவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். கலியபெருமாள், லட்சுமணன் மற்றும் குமார் ஆகிய மூன்று பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், லட்சுமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கர்ணன் மற்றும் லட்சுமணன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், கலியபெருமாள் மற்றும் குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சமும் இழப்பீடாக அறிவித்துள்ளார்.