'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம்
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். மனைவி 18 வயதுக்கு மேல் இருந்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின்(ஐபிசி) கீழ் திருமண பலாத்காரத்தை குற்றமாக கருத முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யபட்ட ஒரு நபருக்கு தீர்ப்பு வழங்கும் போது நீதிமன்றம் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
'ஐபிசி 377-வது பிரிவின் கீழ் தண்டிக்க முடியாது': நீதிபதிகள்
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஐபிசி 377-வது பிரிவின் கீழ் தண்டிக்க முடியாது என்று கூறிய நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அடங்கிய அமரவு, திருமண பலாத்காரம் இந்த நாட்டில் இன்னும் குற்றமாக்கப்படவில்லை என்று கூறியது. திருமண பலாத்காரத்தை குற்றமாக்கக் கோரும் மனுக்கள் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது
குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்பட்டதா?
தன் கணவனுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்த மனுதாரர், தன் கணவன் தன்னை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறி இருந்தார். எனவே, இந்திய சட்டத்தின்படி பாலியல் குற்றங்களுக்காக அவரை தண்டிக்க முடியாது என்று கூறிய நீதிமன்றம், துன்புறுத்துதல்(498-A), காயப்படுத்துதல் (IPC 323) ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
திருமண பலாத்கார விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு
இந்த ஆண்டின் தொடக்கத்தில், திருமண பலாத்காரத்தை குற்றமாகக் கோரும் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. திருமண பலாத்காரத்தை குற்றமாக்குவது சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பலாத்காரம் என்பது இந்தியாவில் மிகப்பெரும் குற்றமாகும். புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் குற்றவியல் சட்டங்களின்படி, பலாத்கார குற்றத்திற்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். ஆனால், இந்தியாவில் திருமண பலாத்காரம் இன்றுவரை குற்றமாக்கப்படவில்லை.
புதிய குற்றவியல் மசோதாவிலும் எந்த மாற்றமும் இல்லை
சில மாதங்களுக்கு முன், மத்திய அரசு முன்மொழிந்த புதிய குற்றவியல் மசோதாவில் கூட திருமண பலாத்காரத்திற்கு எதிராக எந்த விதியும் அறிமுகப்படுத்தப்படவில்லை. "பதினெட்டு வயதை தாண்டிய தன் மனைவியுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வது பலாத்காரம் அல்ல" என்று இந்த புதிய குற்றவியல் மசோதா கூறுகிறது. இதற்கு எதிரான சட்டங்கள் எதுவும் இந்தியாவில் இல்லாததால், திருமணம் என்ற பெயரில் பலாத்காரம் செய்வதற்கு சட்டம் ஒத்துழைப்பதாக சமூக ஆர்வலர்கள் பல வருடங்களாக குற்றம் சாட்டி வருகின்றனர்.