கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ்
மணிப்பூரின் ஆதிக்க சமூகமான மெய்தேய் சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 3ஆம் தேதி அம்மாநிலம் முழுவதும் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' என்ற போராட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வெடித்த வன்முறைகளும் கலவரங்களும் 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த கலவரத்தால் இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 50,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கனக்கான ஜீரோ FIRகளை மணிப்பூர் போலீஸார் சரிபார்த்து வருகின்றனர். அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்த காவல் நிலையத்திலும் ஜீரோ FIRரை பதிவு செய்யலாம். இது போன்ற FIRகளுக்கு வரிசை எண் ஒதுக்கப்படாது. அதற்கு பதிலாக '0' என்ற எண் மட்டுமே பதிவு செய்யப்படும்.
இத்தனை வழக்குகளையம் விசாரிக்க போலீஸார் சிரமப்பட்டு வருகின்றனர்
அதற்குபிறகு, இந்த ஜீரோ FIR வழக்குகள் அதிகார வரம்பிற்குள் இருக்கும் காவல் நிலையத்திற்கு மாற்றப்படும். போலீஸார் அதிகார வரம்பை காரணம் காட்டி பாதிக்கப்பட்டவர்களை அலையவிட கூடாது என்பதற்காக இது போன்ற FIRகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், மணிப்பூரில் மட்டும் கடந்த 2-மாதங்களில் நூறுகணக்கான ஜீரோ FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுராசந்த்பூர் காவல் நிலையத்தில் 1,700, காங்போக்பி காவல் நிலையத்தில் 800+, சைகுல் காவல் நிலையத்தில் சுமார் 202 ஜீரோ-FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தனை வழக்குகளையம் விசாரிக்க போலீஸார் சிரமப்பட்டு வரும் நிலையில், ஒரு சமூகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி இன்னொரு சமூகம் ஆதிக்கம் செலுத்தும் இடத்திற்குள் செல்ல முடியாது என்றும் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.