மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி? முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்
மணிப்பூர் முதல்வர் என் பைரேன் சிங் தனது பதவியை வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ராஜினாமா செய்வதாக ஊடகங்கள் எழுந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு, ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பைரேன் சிங் ஆளுனருடனான சந்திப்பின் போது, அதிகாரப்பூர்வமாக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஜூன் 25 அன்று டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் பைரேன் சிங் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூர் இனக் கலவரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வன்முறையை தடுக்க தவறியதாக தற்போது மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மணிப்பூரில் சட்டசபை இடைநிறுத்தப்படும் என தகவல்
இரு தினங்களுக்கு முன்பு, மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவும் தனியாக டெல்லி சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து மாநிலத்தின் நிலைமை குறித்து பேசியுள்ளார். இந்நிலையில், தற்போது மணிப்பூரில் இருந்து வரும் தகவல்களின்படி பைரேன் சிங் ராஜினாமாவை சமர்ப்பிப்பார் என்றும், அதன் பின்னர் சட்டசபை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, நிர்வாகத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது. மணிப்பூரில் நிலைமையை தவறாக கையாண்டதற்காக பைரேன் சிங் மீது எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, அவரது கட்சியில் உள்ள தலைவர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளதால், இந்த முடிவுக்கு எதிர்ப்பு இருக்காது என மத்திய அரசு கருதுகிறது.