"மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே வெட்கக்கேடு; குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்": பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. அப்போது, மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில் விபத்து, அதிகரிக்கும் விலைவாசி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன. மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச்சேர்ந்த இரண்டு பெண்களை, மைதேயி சமூகத்தைச்சேர்ந்த ஆண்கள் குழு, ரோட்டில் நிர்வாணமாக இழுத்துச்செல்லும் வீடியோ, 2 தினங்களுக்கு முன்னர் சமூகவலைத்தளத்தில் வெளியாகி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்களை இழுத்து சென்றது மட்டுமின்றி, அந்த ஆண்கள் குழு, அவர்களை, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிப்பூரில் நடக்கும் கலவரத்திற்கு எதிர்க்கட்சியினர் பலத்த கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
"குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்": பிரதமர் மோடி
எனினும் இது தொடர்பாக பிரதமர் மோடி மௌனம் காத்துவருவதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், கூட்டத்தொடர் தொடங்கும் முன்னர், பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, "மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி, மன்னிக்கமுடியாதது, நாட்டிற்கே வெட்கக்கேடான விஷயம். இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவர்" எனக்கூறினார். இந்நிலையில், அந்த வீடியோவை நீக்குமாறு டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் செயல்படும் சமூக வலைத்தளங்கள் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மறுபுறம், எதிர்க்கட்சிகள் அவையை ஒத்திவைத்து, இவ்விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.