அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு
சிக்கிம் மாநில முதல் அமைச்சர் பிரேம் சிங் தமாங், தனது மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை மற்றும் குழந்தையின் தந்தைக்கு ஒரு மாத விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார். சிக்கிம் மாநிலத்தில் நேற்று(ஜூலை.,26) சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் சங்கத்தின்(எஸ்.எஸ்.சி.எஸ்.ஓ.ஏ) வருடாந்திர பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வரான பிரேம் சிங் தமாங் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறையினை ஓராண்டிற்கு வழங்கவுள்ளதாக அறிவித்தார். மேலும், இது போன்ற சலுகைகள் வழங்கப்படுவதன் மூலம், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுவதோடு, அவர்களை நல்ல முறையில் கவனித்து கொள்ள உதவும் என்றும் கூறியதாக தெரிகிறது.
விரைவில் முழு விவரம் வெளியிடப்படும் - பி.டி.ஐ. தகவல்
மேலும் பேசிய அவர், "அரசு அதிகாரிகள் அனைவருமே அந்த மாநிலத்தின் முதுகெலும்பாக செயல்படுபவர்கள்" என்றும், "அம்மாநில மக்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் அவர்கள் முக்கிய பங்களிக்கிறார்கள்" என்றும் கூறியுள்ளார். சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு குறித்தும் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று கூறிய அவர், விரைவில் பதவி உயர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, மகப்பேறு விடுமுறை அமல்படுத்துவது குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று PTI தகவல் தெரிவித்துள்ளது. மகப்பேறு சலுகை சட்டம் 1961ன்-படி பணியிலுள்ள பெண்களுக்கு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறையினை வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.