மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்தார் மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, "வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்காக" சர்ச்சைக்குரிய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைத் தடை செய்துள்ளது. "இது வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியைப் பேணவும்" தடை செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பானர்ஜி தெரிவித்துள்ளார். "காஷ்மீர் ஃபைல்ஸ் என்றால் என்ன? அது ஒரு பிரிவினரை அவமானப்படுத்தும் கதை. 'தி கேரளா ஸ்டோரி என்றால் என்ன?'... இது ஒரு திரிக்கப்பட்ட கதை." என்று மேலும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். சுதிப்தோ சென் இயக்கிய 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம், இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு பயங்கரவாத்தில் சேர்க்கப்பட்ட கதாநாயகிகளின் கதையை கூறுகிறது.
வகுப்புவாத பிரிவினைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட படம்: கேரள முதல்வர்
இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இடதுசாரி கட்சிகளும், இஸ்லாமிய கட்சிகளும் இந்த திரைப்படத்திற்கு ஆட்சேபனைகளை தெரிவித்து வருகின்றன. இந்த திரைப்படம் அப்பட்டமான பொய்களின் கலவை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், வகுப்புவாத பிரிவினைகளை உருவாக்கி, அரசுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்தோடு இந்த திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, "'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பயங்கரவாதத்தின் புதிய முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி வாக்குகளை பெறுவதற்காக பயங்கரவாதத்தின் முன் மண்டியிடுகிறது." என்று கூறி இருந்தார்.