பதுங்கு குழிகளில் தஞ்சம் அடையும் இஸ்ரேல் வாழ் மலையாளிகள்
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நேற்று 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தொடுத்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தொடர்ந்து காஸா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. 24 மணி நேரத்தை கடந்து நடைபெறும் இந்த தாக்குதல்களில் இருதரப்பிலும் 600க்கும் மேற்பட்டோர் தற்போது வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போர் மூண்டுள்ள இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் 18,000 இந்தியர்கள் வர இருக்கலாம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் அங்குள்ள பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
"வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள பாலஸ்தீனீர்கள்"- கேரள செவிலியர் தகவல்
இஸ்ரேலில் எட்டு ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வரும் கேரளாவைச் சேர்ந்த ஷைனிபாபு கூறுகையில், "நான் கடந்த எட்டு ஆண்டுகளாக இங்கு செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்களை நான் பார்த்துள்ளேன்". "ஆனால் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்". "இங்கு ஏராளமான கேரள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போதைய சூழலால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்". "பாதுகாப்பிற்காக அவர்கள் பதுங்கு குழிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.நானும் பதுங்கு குழியில் தான் இருக்கிறேன்" என கூறினார். இந்நிலையில் பதுங்கு குழிகள் இல்லாத இடங்களில் வாழும் இந்தியர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.