கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சர்ச்சையை கிளப்பிய 'மேக் மை ட்ரிப்' விளம்பரம்
இந்தியாவில் 13 வது கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டியை காண வரும் பாகிஸ்தான் ரசிகர்களை குறிவைத்து, டிக்கெட் மற்றும் விடுதி முன்பதிவு செய்யும் தளமான ' மேக் மை ட்ரிப்' வெளியிட்டு இருந்த விளம்பரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. "பாகிஸ்தான் ரசிகர்களை அழைக்கிறோம்" என அந்த விளம்பரத்தின் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. "நாம் சிறிது நேரம் ஒதுக்கி நமக்குள் இருக்கும் பகைமையை மறப்போம். நீங்கள் தினமும் இந்தியா வருவதில்லை. அதனால் இந்தியாவின் கலாச்சாரமான 'அதிதி தேவோ பவ' என்பதற்கு நாம் உண்மையாக இருந்து உங்களுக்கு சில சலுகைகளை வழங்குகிறோம்" என எழுதப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் ரசிகர்களை சீண்டிய 'மேக் மை ட்ரிப்'
மேலும் அந்த விளம்பரத்தில் பாகிஸ்தான் ரசிகர்களை சீண்டுவது போன்று சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. "பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் அல்லது 200 ரண்களில் தோற்றால் 50% சலுகையை பெற பாய்ஸ் பிளேடு வெல்(BoysPlayedWell) என்ற கோடை பயன்படுத்தவும்." "6 விக்கெட்டுகள் அல்லது 100 ரன்கள் தோற்றால், 30% சலுகை பெற ஏக் ஷஹீன் கார்(EkShaheenHaar) என்ற கோடை பயன்படுத்தவும்" "3 விக்கெட்டுகள் அல்லது 50 ரன்களில் தோற்றால், 10% சலுகையை பெற நோ மவுக்கா மவுக்கா (NoMaukaMauka) என்ற கோடை பயன்படுத்துவோம்" என எழுதப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் வெளியானது முதல் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் மாறுபட்ட கருத்துக்களை பெற்று வருகிறது.