கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ்
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ் செய்யப்பட்டார். எம்பி மஹுவாவை விசாரித்த பாராளுமன்ற நெறிமுறைகள் குழு, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்து இருந்தது. இந்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். "எம்.பி. மஹுவா மொய்த்ராவின் நடத்தை ஒழுக்கக்கேடான மற்றும் ஒரு எம்பி என்ற வகையில் அநாகரீகமானது என்ற குழுவின் முடிவுகளை இந்த சபை ஏற்றுக்கொள்கிறது. எனவே, அவர் எம்பியாக நீடிப்பது ஏற்புடையதல்ல" என சபாநாயகர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க ₹2 கோடி ரொக்கம் மற்றும் "ஆடம்பர பரிசு பொருட்களை" ஹிராநந்தனி குழுமத்தைச் சேர்ந்த, தர்ஷனிடம் பெற்றதாக மஹுவா மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், கேள்விகளை பதிவேற்றம் செய்வதற்காக, நாடாளுமன்ற லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை, மஹுவா தர்ஷனிடம் பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதை விசாரித்த நாடாளுமன்ற நெறிமுறை குழு, மஹுவா செயல்பாடுகள் "ஆட்சியபனைக்குரிய, நெறிமுறை அற்ற மற்றும் கொடூரமான குற்றம்" என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், நெறிமுறை குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது மஹுவா டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
மஹுவா குற்றம் புரிந்ததை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே எவ்வாறு வெளிக்கொணர்ந்தார்?
கடந்த அக்டோபர் மாதத்தில் எம்பி நிஷிகாந்த் துபே, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு எழுதி இருந்த கடிதத்தில், மஹுவா மீது கேள்வி கேட்பதற்காக பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு சுமத்தி, விசாரிக்க வேண்டுகோள் விடுத்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், மஹுவாவின் முன்னாள் காதலர் எனக் கூறப்படும் ஜெய் அனந்த் தேஹாத்ராய், எழுதிய கடிதத்தை ஆதாரமாக தூபே வழங்கினார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மஹுவா, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், முன் விரோதத்திலும் தூபே மற்றும் தேஹாத்ராய் செயல்படுவதாக கூறியிருந்தார்.
எம்பி நிஷிகாந்த் துபே தன் கடிதத்தில் என்ன எழுதி இருந்தார்?
ஜெய் அனந்த் டெஹாத்ராய் கடிதத்தை மேற்கோள் காட்டி நிஷிகாந்த் துபே, மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள், தர்ஷன் ஹிராநந்தனி மற்றும் அவரது குழுமத்தின் "வணிக நலன்களைப் பாதுகாக்கும் அல்லது நிலைநாட்டும்" நோக்கத்துடன் கேட்கப்பட்டவை என்று குற்றம் சாட்டினார். இந்த கேள்விகள் பெரும்பாலும் ஹிராநந்தனியின் போட்டி நிறுவனமான அதானி குழுமத்தை மையமாக வைத்து, ரொக்கம் மற்றும் பரிசுகளுக்காக கேட்கப்பட்டதாக டெஹாத்ராய் குற்றம் சாட்டினார். கடந்த சில ஆண்டுகளில் மொய்த்ரா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை "கடுமையாக" குறிவைத்து, அடிக்கடி அதானி குழுவைக் குறிப்பிட்டு, தான் "அரசாங்கத்தை விமர்சிப்பது" போன்ற தோற்றத்தை உருவாக்குவதாக டெஹாத்ராய் கூறினார்.
ஒப்புதல் சாட்சியாக மாறிய தர்ஷன் ஹிராநந்தனி
பாஜக எம்பி தூபே, இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக அனைத்து ஆதாரங்களையும் தன் கடிதத்துடன் இணைத்து இருப்பதாக தெரிவித்தார். முதலில் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மஹுவா பின்னர், நாடாளுமன்ற லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை தர்ஷனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும், ஹிராநந்தனி தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்திலும் இது தொடர்பான பல உண்மைகளை அவர் தெரிவித்திருந்தார். துபேவின் குற்றச்சாட்டுகளும், அதற்கு ஆதாரமான டெஹாத்ராய் கடிதமும், ஹிராநந்தனி தாக்கல் செய்த பிரமாண பத்திரமும், எம்பி மஹுவா டிஸ்மிஸ் செய்யப்பட காரணமானது.