1967க்கு பிறகு முதல்முறை; எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா
மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிவுகள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி (பாஜக), முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் மகாயுதி கூட்டணி சனிக்கிழமை (நவம்பர் 23) வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 235 இடஙகளைக் கைப்பற்றியுள்ளது. இவற்றில் பாஜக 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த அமோக வெற்றி, ஆறு தசாப்தங்களில் முதல்முறையாக மகாராஷ்டிர சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் ஆக்கியுள்ளது. கடைசியாக 1962 மற்றும் 1967 தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக யாரும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவருக்கான விதி
மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் சம்பளம் மற்றும் படிகள் சட்டத்தின் விதிகளின்படி, எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க ஒரு கட்சி மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10% இடங்களை கொண்டிருக்க வேண்டும். ஆனால், எந்த எதிர்க்கட்சியும் தகுதி பெறவில்லை. எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணியின் ஒரு பகுதியான சிவசேனா (யுபிடி) வெறும் 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் என்சிபி (எஸ்பி) 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. முன்னாள் சட்டமன்ற முதன்மைச் செயலாளர் அனந்த் கல்சே, "எதிர்க்கட்சிக்கு 28 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவரை பரிந்துரைக்க முடியும்" என்று கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டாக கோர முடியுமா?
காங்கிரஸ், சிவசேனா (யுபிடி), என்சிபி (எஸ்பி) ஆகிய கட்சிகளுக்கு தனிப்பட்ட முறையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். அவர்களின் ஒருங்கிணைந்த பலம் தேவையான எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தாலும், தனிப்பட்ட கட்சிகள் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உரிமை கோர முடியும் என்று விதிகள் கூறுகின்றன. கடந்த காலங்களில் காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாதபோது மகத்தான வெற்றிகள் பெற்ற சமயத்திலும், இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்பட முடியாத சூழல் இருந்ததைப் போல் இது உள்ளது. தற்போதைய நிலையில், மகாராஷ்டிரா மட்டுமல்லாது, இதே காரணங்களால் ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது
இந்த தேர்தல் முடிவுகள் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரின் கட்சிகளில் பிளவுக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஜூன் 2022 இல் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான ஏக்நாத் ஷிண்டேவின் கிளர்ச்சி சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அஜித் பவார் 2023 இல் ஆளும் கூட்டணியில் சேர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற பாஜக தலைவர்கள் இந்த முடிவுகள் வரலாற்று வெற்றி என்று கூறியுள்ளனர். இதற்கிடையே, பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவருமே வலுவான போட்டியாளர்களாக இருப்பதால், முதல்வர் பதவிக்கு யார் அமர்வது என்பது குறித்த பேச்சுக்கள் தீவிரமாக உள்ளன.